சட்டத்தை ஏமாற்றி துப்பாக்கி லைசென்ஸ் பெற முயற்சி.
Posted by
Subramanian
at
5
comments
மோசடி அம்பலமானது
தாய்மாமன் தயாரித்திருந்த குத்தகை ஆவணங்களான இருபது ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாட்கள் இரண்டில் குத்தகையின் விபரங்களை எழுதி,அவைகளில் தனது தமக்கையாரின் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.இரண்டிலும் சாட்சியாகத் தனக்கு நம்பகமான ஒருவரிடமிருந்து சாட்சிக் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்.
அந்த இரண்டு முத்திரைத் தாட்களையும் கவனமாகப் பரிசீலித்ததில் இரண்டு தவறுகள் புலனாயின.
சாதாரணமாக முத்திரைத் தாள் ஒவ்வொன்றிலும் மேல்புறம் முத்திரைத்தாள் விற்பனையாளரின் பெயர்,முகவரி கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தப்பட்டிருக்கும்.அதில் முத்திரைத் தாளின் வரிசை எண்,விற்பனையான தேதி,முத்திரைத் தாள் வாங்கியவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
இந்த வழக்குக் கோப்பில் இருந்த முத்திரைத் தாட்கள் சம்பந்தப்பட்ட ஊரில் வாங்காமல் வேறு ஒரு ஊரில் வாங்கப்பட்டிருந்தன.வாங்கியவரின் பெயரும் ஊரும் மாறுபட்டிருந்தன.இவை எல்லாவற்றையும் விட,வாங்கிய தேதி குத்தகை எழுதிய தேதிக்குப் பின்னர் வரும் தேதியாக இருந்தது. அதாவது முத்திரைத் தாட்கள் வாங்கிய தேதி 2008 மே மாதம் 22ந்தேதி என்று வைத்துக் கொள்வோம்.அதில் குத்தகை விபரம் எழுதிய தேதி 2007 சனவரி மாதம் 15 என்று இருந்தால் எப்படி இருக்கும்?
இவை எல்லாவற்றையும் விட,இன்னொரு முரண்பாடு என்னவென்றால்,இரண்டு குத்தகை ஆவணங்களும் நிலங்கள் இருக்கும் அந்தந்தக் கிராமங்களில் உள்ள வெவ்வேறு தோட்டங்களில் வைத்து எழுதப்பட்டதாக இருந்தன.இரண்டிலும் ஒரே நாள் காட்டப்பட்டிருந்தன.அவைகளில் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்த நபரைத் தாசில்தார் ஏற்கனவே விசாரித்து வாக்குமூலம் பெற்றிருக்கிறார்.அந்த வாக்குமூலங்களைப் பரிசீலித்ததில்,குத்தகை ஒப்பந்தம் எழுதிய அன்று பிற்பகல் மூன்று மணி அளவில் நில உரிமையாளரும் குத்தகைதாரரும் கையெழுத்துப் போட்டபிறகு தாமும் சாட்சிக் கையெழுத்துப் போட்டதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார்.இதேமாதிரி குத்தகைதாரரின் வாக்குமூலமும் இருந்தன.
அதெப்படி ஒரே நாளில் ஒரே நேரத்தில் இவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருக்கமுடியும்?
சப் கலெக்டரிடம் இந்த முரண்பாடுகளைக் காட்டி விளக்கினேன்.சொத்துக்காக இவ்வாறெல்லாம் செய்கிறார்களே என்று வேதனை அடைந்தார்.
அடுத்த வாய்தா அன்றே,குத்தகை உரிமையைப் பதிவு செய்து வட்டாட்சியர் பிறப்பித்திருந்த ஆணை ரத்து செய்யப்பட்டது.
Posted by
Subramanian
at
8
comments
Labels: நல்ல தீர்ப்பு
தமிழ்நாடு விவசாய நிலங்கள்(குத்தகை உரிமைப் பதிவு)சட்டம்1969 ன் கீழ் ஒரு வழக்கு
சப் கலெக்டர் அலுவலகத்தில் நான் பணியாற்றியபோது இன்னொரு சுவாரசியமான வழக்குக் கோப்பு நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.
அதாவது விவசாய நிலங்களைப் பெரும்பாலும் குத்தகைக்கு விட்டிருப்பார்கள்.குத்தகைக்கு எடுத்தவர் நெல்,கரும்பு,பருத்தி என்று பயிரிடுவார்கள்.விளைந்த பயிரில் ஒரு பங்கு அல்லது அதற்கு ஈடான பணம் குத்தகைக்கு ஈடாக நில உரிமையாளருக்குச் சேரும்.
முன்பெல்லாம்,குத்தகைதாரர் குத்தகை சரிவரக் கொடுக்காமல் இருந்தாலோ காலம் தாழ்த்திக் கொடுத்தாலோ நில உரிமையாளர் குத்தகைதாரரை நிலத்தைவிட்டு வெளியேற்றி விடுவார்.இந்நிலையில் குத்தகைதாரரைப் பாதுகாக்கச் சட்டம் ஏதும் இல்லாமல் இருந்தது.காலமெல்லாம் நிலத்தில் இறங்கிப் பாடுபடும் விவசாயிக்குப் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.இந்த அவல நிலையை அகற்றவேண்டி 1969ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது.தமிழ்நாடு விவசாய நிலங்கள்(குத்தகை உரிமைப் பதிவு)சட்டம் என்று அதற்குப் பெயர்.
இந்தச் சட்டத்தின்படி ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் ஒருவர் சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தாரிடம் மனுச் செய்தால் போதும்.தாசில்தார் அம்மனு மீது உரிய விசாரணை நடத்துவார்.விசாரணையில் குத்தகைக்குப் போடுவது உண்மை எனத் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குரிய குத்தகைப் பதிவேட்டில் அந்நிலத்தின் குத்தகைதாரராக அவரைப் பதிவு செய்வார்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஒரு குத்தகைதாரரை அவ்வளவு லேசில் வெளியேற்றிவிட முடியாது.சட்டம் அவருக்குப் பல வழிகளில் பாதுகாப்புத் தருகிறது.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு நபர் தனது சொந்தத் தமக்கையாரின் அனைத்து நிலங்களுக்கும் தன்னைக் குத்தகைதாரராகப் பதிவு செய்துகொண்டார்.
அதாவது தமக்கையின் கணவர் மிகப் பெரிய நிலச் சுவான்தார்.அண்ணன் தம்பி இல்லை.அவருக்கு இரண்டு கிராமங்களில் மொத்தம் நஞ்சை ஒரு பதினைந்து ஏக்கர்,புஞ்சை இருபது ஏக்கர் இதற்கும் மேலாகத் தென்னந்தோப்பு ஒரு பத்துப் பதினைந்து ஏக்கர் இருந்தது.இரண்டு ஆண் வாரிசுகள்.ஒரு மகனுக்கு இருபது வயது.மற்றோருவருக்குப் பதினேழு. திடீரென்று ஒரு நாள் இரவு மாரடைப்பால் காலமாகிவிட்டார்.
அந்திமச் சடங்குகள் எல்லாம் முடிந்தன.உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை என்பது தெரிந்தது.மனைவியோ வெளியே சென்று விவசாயத்தைக் கவனிக்க இயலாத நிலை.இரண்டு மகன்களுக்கும் இளம் வயது.எல்லாம் சேர்ந்து,குடும்பப் பொறுப்புமுழுதும் காலஞ்சென்றவரின் மைத்துனரிடம் தானாக வந்தது.தகப்பனில்லாத இரண்டு ஆண்மகன்களுக்கும் இவரே கார்டியன் ஆனார்.
காலம் சென்றது.இரண்டு கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் குத்தகைதாரராகத் தன்னை நியமிப்பதாக இரண்டு ஆவணங்கள் தயார் செய்து தமக்கையிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டார்.அவ்வளவு சொத்துக்களுக்கும் குத்தகைப் பணம் மொத்தம் எவ்வளவு தெரியுமா?ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ரூ 680/-மட்டுமே.கிராமத்தில் உள்ள தனக்கு மிக நெருக்கமான ஒருவரிடம் சாட்சிக் கையெழுத்தும் அந்த இரண்டு ஆவணங்களிலும் வாங்கிக் கொண்டார்.உடனே தாசில்தாருக்குத் தன்னை மேற்கண்ட அனைத்து நிலங்களுக்கும் குத்தகைதாரராகப் பதிவு செய்யும்படி இரண்டு மனுக்கள் கொடுத்தார்.
விசாரணை நிலுவையில் இருந்தபோது,மேற்சொன்ன தமக்கை காலமாகி விட்டார்.விசாரணையும் நடந்தது.இரண்டு ஆவணங்களின் அடிப்படையிலும்,அவைகளில் சாட்சிக் கையொப்பம் போட்டிருந்த நபரின் வாக்குமூலத்தை வைத்தும் மேற்படி நிலங்கள் அனைவற்றிற்கும் இவரைக் குத்தகைதாரராகப் பதிவு செய்து கிராமத்திற்கு ஒன்றாக இரண்டு உத்தரவுகளைத் தாசில்தார் பிறப்பித்தார்.
இவ்வளவும் காலஞ்சென்ற அந்த நிலச் சுவான்தாரரின் இரண்டு மகன்களுக்கும் தெரியாமல் நடந்தன.
தெரிந்தபோது எல்லாம் முடிந்துவிட்டது.
தாய்மாமனாயிற்றே.எதிர்த்துப் பேசவும் முடியவில்லை.ஆனாலும் நாளாவட்டத்தில் பிரச்சனைகள் பெரியதாகி தாய்மாமனுடன் பேசுவதும் நின்றுபோனது.இரண்டு மகன்களும் ஒரு வழக்குரைஞரைக் கலந்தாலோசித்து தாசில்தாருடையஇரண்டு உத்தரவுகளையும் எதிர்த்து சப்கலெக்டருக்கு இரண்டு மேல்முறையீடுகள் செய்தார்கள்.
வருவாய்த்துறையில் எந்த வேலையும் அவ்வளவு சீக்கிரமாக முடியாது.சவ்வாக இழுத்துக்கொண்டே போகும்.இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் மீதும் வாய்தா மேல் வாய்தாக்களாக நீண்டுகொண்டே போனது.சுமார் நான்கு ஆண்டுகளாகியும் வழக்கு வாய்தாக்களிலேயே இருந்தன.இந்நிலையில்தான் அந்தப் பிரிவுக்கு நான் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன்.
ஒரு வாரத்தில் அந்த மேல்முறையீடுகளும் அடுத்த வாய்தா தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.ஒவ்வொரு கட்டும் வெறும் வாய்தா கேட்கும் மனுக்களால் நிறைந்திருந்தன.சப் கலெக்டருக்கு வேறு அவசரப் பணி காரணமாக அன்று விசாரணை நடக்கவில்லை.வழக்கம் போல வாய்தா கொடுக்கப்பட்டது.எல்லா கட்சிக்காரர்களும் சென்றபின் மேற்சொன்ன இரண்டு மகன்களும்(மேல்முறையீடுதாரர்கள்)என்னை வந்து சந்தித்தனர்.தாய்மாமனால் வஞ்சிக்கப்பட்ட அவலங்களைச் சொன்னார்கள்.சட்டத்துக்குட்பட்டு என்ன செய்ய இயலுமோ செய்வதாகச் சொல்லி அனுப்பிவைத்தேன்.அன்றே அவ்விரு கட்டுகளையும் தீவிரமாகப் பரிசீலித்ததில் குத்தகை ஆவணங்களில் தாய் மாமன் செய்திருந்த ஒரு மிகப்பெரும் தவறைக் கண்டுபிடித்தேன்.
Posted by
Subramanian
at
3
comments
Labels: பேராசை பெருநஷ்டம்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 109-ன் கீழ் வழக்குகள்
"முக்காடு கேஸ் அல்லது சந்தேகக் கேஸ்"என்பது பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?பொதுமக்களின் அன்றாட
நலனுக்காகவும்,மக்களின் இயல்பான வாழ்க்கைக்காகவும்
காவல் துறையினரால் அடிக்கடி போடப்படும்
சந்தேகக் கேசுகள் இவை.அதாவது மக்கள் அன்றாடம்
புழங்கும் பேருந்து நிலையம்,மார்க்கெட்,சந்தை பொது இடங்களில்
இரவு நேரங்களில் காவல் துறையினர் விழிப்புடன்
வலம் வருவார்கள்.சந்தேகப்படும்படியான நபர்களைப் பிடித்து
அவர் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்,என்ன காரணமாக
இரவு நேரத்தில் பொது இடத்தில் தங்கி இருக்கிறார்
என்பது போன்ற தகவல்களை விசாரிப்பார்கள்.பிரச்சனையே
இல்லாதநபர்கள் காவல் துறையினரின் கேள்விக் கணைகளைச்
சுலபமாகவும்,திருப்திகரமாகவும் பதில் சொல்லிவிடுவார்கள்.
ஆனால்,குற்றம் புரியவேண்டும் என்ற நோக்கத்துடன்
முனைந்திருக்கும் ஒருவன் அகப்பட்டால்,அவனால்
சரியான பதில் சொல்ல முடியாது.
உதாரணமாக நள்ளிரவு ஒரு மணி அளவில் கடை வீதியில்
ஒரு கடையின் வாசற்படியில் ஒருவன் தூங்குவது மாதிரி
கடையின் பூட்டுகளைப் பார்த்தபடியே படுத்திருந்தான்
என்று வைத்துக் கொள்வோம்.காவல் துறையினரின்
எந்தக் கேள்விக்கும் அவனால் திருப்தியான பதில்
சொல்ல முடியவில்லை.அவனை அப்படியே விட்டு விட்டுப்
போய் விட்டால் நிச்சயம் குற்றத்தில் ஈடுபடுவான்.
அத்தகைய குற்றம் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் அல்லவா?
அப்படிப் பட்டவனை அகால நேரத்தில்
பொதுஇடங்களில் எக்கேடோ கெட்டுப் போ
என்றா விட்டுவிட்டுப் போக முடியும்?
அப்புறம் காவல் துறை எதற்கு இருக்கிறது?
அத்தகைய நபர்களைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து
என்ன காரணத்திற்காக அங்கே இருந்தான் என்பதைத்
தெளிவாகக் குறிப்பிட்டு அந்நபரைக் கைது செய்து
காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று உரிய
நிர்வாக நடைமுறைகளின்படி குற்றவியல்
நடைமுறைச் சட்டம் பிரிவு109 ன் கீழ் முதல்
தகவல் அறிக்கை தயாரித்து லாக்கப் அறையில்
அடைத்து விடுவார்கள்.மறுநாள் காலை அந்தக்
கைதியை சப் கலெக்டர் முன்பாக ஆஜர்படுத்துவார்கள்.
சப் கலெக்டர் அந்தக் கைதியை விசாரணை செய்து தகுந்த
வகையில் கண்டிப்பார்.பிறகு குறிப்பிட்ட தொகைக்குக்
கைதியின் சொந்த ஜாமீன் பேரில் ஒரு ஆண்டு காலத்திற்கு
நன்னடத்தையுடன் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து
அன்றைக்கே அவனை விடுவித்து விடுவார்.
இச்சட்டத்தைக் காவல்துறையினர் செம்மையாக அமுல்படுத்துவதால்
சாதாரணப் பொதுமக்களாகிய நாம் உட்பட அனைவரும்
கவலைப் படாமல் இரவில் தூங்குகிறோம்.
இச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்யும் அதிகாரம் 1983 க்கு முன்னால்
வரை வட்டாட்சியர் என்று அழைக்கப்படும் தாசில்தாரிடம்
இருந்து வந்தது.1983 ல் இச்சட்டம் திருத்தப்பட்டபின்
இந்த அதிகாரம் தாசில்தாரிடமிருந்து சப் கலெக்டருக்கு மாற்றப்பட்டது.
எனவே தாசில்தார்களிடம் நிலுவையில் இருந்த கேஸ் கட்டுகள்
சப் கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது.
Posted by
Subramanian
at
5
comments
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 107,145-ன் கீழ் வழக்கு
வருவாய்த் துறையில் நான் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு வழக்கு வந்தது.குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107 பிரிவின் கீழ் ஒரு வழக்கும்,பிரிவு 145 ன் கீழ் இன்னொரு வழக்குமாக ஒவ்வொரு வாய்தாவிற்கும் இரு தரப்பாரும் வருவார்கள்.
யாராவது ஒரு வழக்குரைஞர் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வாய்தா கேட்பார்.வழக்கு அடுத்த வாய்தா தேதி போட்டு ஒத்தி வைக்கப்பட்டு விடும்.வேலைப் பளு காரணமாக சில மாதங்களாக வழக்குக் கட்டை ஆராய முடியவில்லை.ஒரு வழியாக நெளிவு சுழிவுகளெல்லாம் பிடிபட்டதும் ஒவ்வொன்றாக ஆராய ஆரம்பித்தேன்.இந்தக் குறிப்பிட்ட வழக்கானது இரண்டு சகோதரர்களுக்கிடையே இருந்த சொத்துப் பிரச்சனை மட்டுமே.இருவரின் பெற்றோர் நீண்ட காலத்திற்கு முன்பே காலமாகிவிட்டனர்.வாரிசுகள் இந்த இரு மகன்களைத் தவிர வேறு யாருமில்லை.கொஞ்சம் நஞ்சம் சொத்தல்ல.நஞ்சை புஞ்சை தோப்பு துரவு ஆள் அம்பு ஏராளம்.எந்த சொத்தை யார் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்று வீட்டுக்குள் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் சிறிது சிறிதாக வளர்ந்தன.அப்புறம் சொந்தக்காரர்களும் ஊர்ப் பெரியவர்களும் எதற்கு இருக்கிறார்கள்?இரு தரப்பிலேயும் ஆளுக்கு ஆள் நெய் ஊற்றிப் பற்ற வைக்காதது தான் மிச்சம்.
ஒரு நாள் வாய்க்கால் தகராறு ஆரம்பித்தது.இருவருக்கும் பொதுவான ஒரு கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் ஒரு வயலுக்குப் பாய்ந்த பின்,அடுத்து உள்ள பொதுப் பாதையைத் தாண்டித் தான் மற்ற நிலங்களுக்குச் சென்று பாய முடியும்.பொதுக் கிணறு மூத்தவரின் வீட்டுக்கருகில் இருந்தது.ஆனால் நீர் பாயும் முதல் நிலம் இளையவருடையது.பொதுப் பாதையைத் தாண்டித் தான் மூத்தவரின் நிலமாக இருந்தது. யாருடைய வயலில் முதலில் பாய்ச்சுவது என்று ஆரம்பித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் காவல் துறையிடம் புகார் செய்யும் அளவிற்குச் சென்று விட்டது.கிணறு யாருடைய அனுபவத்தில் உள்ளது யார் யாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இயலாத நிலையில்,வழக்கை மேற்சொன்ன 107 பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர்.போட்டு சப் கலெக்டர் ஆபீசுக்கு அனுப்பி விட்டார்கள்.இம்மாதிரி வழக்குகளை விசாரிக்கவும் இன்னும் பல சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்காகவும் தான் சப் கலெக்டருக்கு நிர்வாக உட் கோட்ட நடுவர்(சப் டிவிஷனல் எக்சிகியூடிவ் மேஜிட்ரேட்)அந்தஸ்து தரப்பட்டுள்ளது.இது இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.வழக்கு ஆரம்பத்தில் கிணற்றுப் பாத்தியதை யாருடய பொறுப்பில் இருந்தது என்பதை முடிவு செய்யும் வரை இரு தரப்பினரும் கிணறு இருக்கும் பகுயில் நுழையக் கூடாது என்று தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
வழக்கு நிலுவையில் இருந்தபோதே பிரச்சனை மீண்டும் வெடித்து இரு தரப்பினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர்.காவல்துறை மீண்டும் தலையிட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து அதுவும் சப் கலெக்டர் முன்னிலையில் வந்தது.
நான் உதவியாளராக இவ்வலுவலகத்தில் சேர்வதற்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்வழக்கு தொடந்து விசாரணையில் இருந்து வந்தது.ஏன் கேட்கிறீர்கள்?ஒவ்வொரு வாய்தா நாளன்றும் இரு தரப்பிலேயும் சுமார் அறுபது எழுபது நபர்கள் வருவார்கள்.பிற்பகல் மூன்று மணிக்கு வாய்தா என்றால் காலை பதினோரு மணிக்கெல்லாம் ஆட்கள் வர ஆரம்பித்துவிடுவார்கள்.அங்கேயே கர் புர் என்று சலசலக்கும் சத்தம் கேட்கும்.மூன்று மணிக்கு கோர்ட் ஆரம்பிக்கும்.இந்த வழக்கில் இரு தரப்பிலேயும் சுமார் ஆறு வழக்குரைஞர்கள் ஆஜராவார்கள்.இரு தரப்பிலேயும் யாராவது ஓரிருவர் ஆஜராயிருக்க மாட்டார்.அப்படிப்பட்ட நபர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகி பிரதிவாதிகள் ஆஜராகாததற்கு ஏதாவது காரணம் குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்வார்கள்.சப் கலெக்டரும் அம் மனுக்களை ஏற்று வழக்கை ஓரிரு மாதம் கழித்து ஒத்தி வைத்துவிடுவார்.இரு தரப்பினரிடம் வாய்தா தேதி சொல்லிக் கையெழுத்து அல்லது ரேகை வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.
வழக்கு இப்படியே போய்க் கொண்டிருந்தது.நாட்கள் செல்லச் செல்ல வழக்குக் கட்டுகளைஒவ்வொன்றாக ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தேன்.இவ் வழக்கில் காவல்துறையினர் கேஸ் போட்டதுடன் சரி.ஒரு முன்னேற்றமுங் காணோம்.விசாரணையே ஆரம்பிக்கவில்லை.எத்தனை ஆண்டுகளாக என்கிறீர்கள்?சுமார் ஏழு ஆண்டுகள் ஆகி விட்டிருந்தன.
ஒருநாள் அந்த கிராமத்திற்கான கணக்குப் பிள்ளை வேறொரு காரியமாக வந்திருந்தார்.அந்தக் காலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லை.கணக்குகளைப் பராமரிப்பதற்குக் கர்ணம் என்று அழைக்கப்படும் கணக்குப் பிள்ளையும் நிலவரி வசூல் செய்ய நாட்டாமை என்று அழைக்கப் படும் கிராம முன்சீப்பும் தான் இருந்தனர்.வந்திருந்த கணக்குப் பிள்ளை மிகவும் வயதானவர்.புத்திசாலி. என்னிடம் வந்து பணிவுடன் நின்றார்.என்னங்க என்ன வேணும்.என்று கேட்டேன்.உணர்ச்சிப் பெருக்கில் சொல்ல வந்ததை விட்டு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்.அலுவலகத்தில் உள்ளவர்களெல்லோரும் ஓடி வந்து ஆசுவாசப்படுத்திவிட்டனர்.சிறிது நேரம் கழித்து ஆரம்பித்தார்.
"ஐயா.சொல்றேன்னு யாரும் தப்பா நினச்சுராதீங்க.கிராமமே ரெண்டு பட்டுக் கெடக்கு.ஊர்லெ இவங்க குடும்பந்தான் ரொம்ப மதிப்பும் மருவாதையுமா இருந்துச்சு.இவங்க குடும்பந்தான் ஊர் நாட்டாமை,மணியகாரர் எல்லாம்.எந்த ஒரு நல்லது கெட்டதுக்கெல்லாம் இவங்க அப்பன்,தாத்தா கிட்டே தான் வருவாக.பெரியவர் காலமானதிற்குப் பெறவு ஒண்ணுமே நடக்கிறதில்லெ.
ஒரு கல்யாணங் காச்சி இல்லெ.ஒரு திருவிழா இல்லெ.சரியான வெவசாயமும் இல்லெ.எப்படி வாழ்ந்த குடும்பம் யார் சாபத்திலேயோ இப்படி ரெண்டுபட்டுக் கெடக்கு.இந்தக் கேசுனாலெ இரு தரப்பு சார்பிலேயும் ரொம்ப சனம் நடையா நடந்துகிட்ருக்காங்க.பொழப்பே கெட்டுப் போச்சுங்க. நீங்க யாரோ யார் பெத்த பிள்ளையோ.கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கேசை சீக்கிரம் விசாரிச்சு முடிச்சீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போவுங்க.
சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டார்.
இதில் ஒரு சாதாரண உதவியாளர் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?செய்ய முடிந்ததே!!
அடுத்த வாய்தா தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் இரண்டு சகோதரர்களையும் வரவழைக்கச் செய்தேன்.கிராமக் கர்ணம் வந்து முறையிட்டதைச் சொன்னேன்.
"இதப் பாருங்க.உங்க ரெண்டு பேர்கிட்டேயும் பெரிசா சொல்றதுக்கில்லே.நல்லா இருந்த ஊர் உங்க சொத்துப் பிரச்சனையாலெ ரெண்டு பட்டுக் கிடக்கு.நீங்க ரெண்டு பேரும் பழசையெல்லாம் கொஞ்ச நேரம் மறந்து நான் சொல்றதெக் கேட்டீங்கன்னா வழக்கெ ரொம்ப சுளுவா முடிச்சுடலாம்.என்ன சொல்றீங்க?"
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மேலும் ஆரம்பித்தேன்."நான் சொல்ற மாதிரி முடிவெடுக்கிறதுக்கு உங்க ரெண்டு தரப்பிலேயிருந்தும் வக்கீலே தேவையில்லெ.நீங்களே முடிவு எடுக்கலாம்."
ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"பிரச்சனையே சொத்துப் பிரிக்கிறது தான்.வேறெ ஒண்ணுமில்லெ.நபர்களும் நீங்க ரெண்டு பேர்கள் தான்.வேறெ யாருமில்லெ.இருக்கிற சொத்தை ரெண்டாப் பங்கிடுங்க.யார் பங்கு போட்றதுங்கிறீங்களா?உங்கள்லெ மூத்தவரே போடட்டுமே.சரியா ரெண்டாப் போடட்டும்.அதுலெ எந்தப் பங்கெ தான் எடுத்துக்கிறதுங்கிற உரிமை தம்பி முடிவு செய்யட்டும்.மிச்சப் பாதியெ அண்ணங்காரர் தானா எடுத்துக்கிறாரு.ரெண்டாப் பிரிக்கிற உரிமெ அண்ணனுக்கு.அதுலே எந்தப் பங்கு தனக்குன்னு மொத்ல்லெ முடிவு சொல்ற உரிமெ தம்பிக்கு"
ஒரு நிமிடம் பிரமை பிடித்தவர்கள் போல இருந்தார்கள்.இருவருக்கும் உடம்பு சிலிர்த்துக் கொண்டது.இருவர் கண்களீலிருந்தும் கண்ணீர் தாரை தாரையாய் வழிய ஆரம்பித்தது.கொஞ்சநேரத்தில் இருவரும் விசும்பலுக்கிடையே கட்டித்தழுவிக் கொண்டார்கள்.
முதலில் அண்ணன்காரர் ஆரம்பித்தார். "சார்.நீங்க கூப்பிட்டனுப்பிச்சதும் என்னடா ஒரு கிளார்க்
கூப்பிட்டுத் தனியாப் போறோமே,எதுக்கும் வக்கீலெக் கூப்பிட்டுப் பொகலாமேன்னு நெனச்சேன்.வக்கீலெல்லாம் கண்டிப்பா வேணான்னு நீங்க கூறிட்டீங்களாம்.சரி எவனெவனையோ பாத்தாச்சு.இந்த் கிளார்க்கெ சமாளிக்கமாட்டோமான்னு எகத்தாளம் பேசிட்டு வந்தேன்.என்னெ மன்னிச்சிடுங்க."
அடுத்து தம்பி முறை."சார்.உண்மெயெச் சொல்றேங்க.நாளாக நாளாக எனக்குள்ளேயே ஆத்திரம் பொங்கி வழிஞ்சிகிட்ருந்துச்சு.சீக்கிரமே இந்தக் கேஸ் முடியல்லேன்னா ஒண்ணூலெ ரெண்டு பாத்துற்றதுன்னு அண்ணார்(கவனியுங்கள்!அண்ணார்!!)மேலேயே கருவிகிட்டிருந்தேன்.இவ்வளவு சுளுவா முடிஞ்சுபோகும்னு நெனக்கவே இல்லே.எனக்கு மேலெ என்ன சொல்றதுன்னு தெரியல்லெ.சார்.நாங்க வாரோம்."
"கொஞ்சம் நில்லுங்க.அப்புறம் இந்தக் கேஸ் என்னாறது?ரெண்டு பேரும் நான் சொன்னமாதிரி சொத்தெப் பிரிச்ச பின்னாடி ஒரு பிரமாண வாக்குமூலம் தயாரிச்சு இம்மாதிரியாக சொத்தெப் பிரிச்சுக்கிட்டோம்னு சப் கலெக்டர் கிட்டெ வர்ற வாய்தான்னக்கித் தாக்கல் பண்ணனும்.அதுலெ சப் கலெக்டர் ஆர்டர் போடணூம்.அப்புறந் தான் கேசே முடியும்."என்றேன்."அப்படியே ஆகட்டுங்க."
அடுத்த வாய்தா அன்று இரண்டு சகோதரர்களும் சும்மா சொல்லக் கூடாது.பளிச்சென்று வேட்டி சட்டை நெற்றியில் பழனி விபூதி,சந்தனம் பூசி ஆஜரானார்கள்.கூட வந்தவர்களில் யார் எந்தத் தரப்பினர் என்று பிரிக்க முடியவில்லை.ஒருவருக்கொருவர் தழுவிக்கொள்வதும் மாமன் மச்சான் என்று கேலி செய்து கொள்வதும்,என்னமோ போங்கள் ஆபீஸே ஒரு மாதிரி ஆகி விட்டது.
சப் கலெக்டர் முன்னிலையில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ததும்,கேஸ் தள்ளுபடியானதும்,மறுநாள் ஒரு பத்துப் பதினைந்து வழக்குரைஞர்கள் என்னைச் சந்தித்து"எங்க பிழைப்பையே கெடுத்து விட்டீர்களே,இந்த ஒரு கேஸை நம்பியே இத்தனை வருஷம் பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தோமே எல்லாமே போச்சே"என்று புலம்பியதும் தனிக் கதை.
Posted by
Subramanian
at
12
comments
Labels: தீர்வு
உதவியின் தேவை
"நாடென்ன செய்தது எனக்கு-எனக்
கேள்விகள் கேட்பது எதற்கு-நீ
என்ன செய்தாய் அதற்கு-என்று
நினைத்தால் நன்மை உனக்கு"
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் நடித்த"நான் ஏன் பிறந்தேன்"என்ற திரைப்படத்தில் வரும்
பாடலில் வரும் வைர வரிகள் இவை.
உங்கள் கண்ணுக்குத் தென்பட்டோரின் துன்பங்களைத் தீர்க்க உங்களால் முடிந்தவரை உதவுங்கள்.உங்கள் உதவியானது தனிப்பட்ட ஒருவரின் துன்பத்தைத் தீர்ப்பதாக இருக்கலாம்.நீங்கள் குடியிருக்கும் தெருப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.
அல்லது உங்கள் நெருங்கிய உறவினர்க்கிடையே இருக்கலாம்.ஏன் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.
"தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்"
இவ்விரு குறள் பாக்களையும் பாருங்கள்.மகன் தந்தை இருவருக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் உதவியானது இருவரையும் சமுதாயத்தில் எத்துணைத் தூரம் ஏற்றம் கொள்ளவைக்கிறது என்று.
அடுத்ததாக உறவுமுறை இல்லாத இருவரின் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.
"உடுக்கை இழந்தவன் கை போலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இடுப்பில் கட்டியிருக்கும் துணி-வேட்டி என்றே வைத்துக்கொள்வோம்.அது தற்செயலாகத் திடீரென்று அவிழ்ந்து விட்டால் நமது கை அனிச்சையாகச் செயல்பட்டு வேட்டியைப் பிடித்துக் கட்டி விடுகிறதல்லவா?அதுபோலவே ஒருவனது துன்பத்தைத் துயரைப் பார்த்த நண்பன் எந்த எதிபார்ப்பையும் பாராது உடனே செயல்பட்டு அத்துன்பத்தைக் களையவேண்டுமாம்.அது தான் உதவி.
தர்மத்திற்கும் தானத்திற்கும் நிறையவே வேறுபாடு உண்டு.பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்வது தர்மம்.போகும்போது புண்ணியமாவது கிடக்கட்டும் என்று செய்யும் உதவியானது தர்மமாகும்.ஏதும் எதிர்பாராது செய்வது தானமாகும்.
அவ்வாறு செய்யும் உதவி எத்தன்மைத் தக்கதாக இருக்க வேண்டும்?
விரோதியாக இருந்தாலும் தாகத்தைத் தீர்ப்பது தான் தண்ணீரின் தன்மை.
இப்படி இருக்க வேண்டும்.
கொல்கத்தா தெருக்களில் எந்த ஆதரவுமின்றி தொழுநோயால் பீடிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு நேசக்கரம் நீட்டித் தொட்டுத் தூக்கி மருந்திட்டுச் சிகிச்சை அளித்த ஒரு மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அதற்காக கொல்கத்தா நகரின் தெருக்களிலுள்ள கடைகளுக்குச் சென்று ஏதாவது உதவுங்கள் என்று கையேந்துவாராம்.ஒருமுறை ஒரு வியாபாரி இவர் ஏந்திய கைகளில் காறித் துப்பினானாம்.பதிலுக்கு அம் மாமனிதர் என்ன செய்தார் தெரியுமா?கைகளிலிருந்த எச்சில் கறையைத் துடைத்து விட்டு நீங்கள் கொடுத்த எச்சிலை நான் எடுத்துக் கொண்டேன்.நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஏழைக்காக ஏதேனும் உதவுங்கள் என்றாராம்!
மெசிடொனியா நாட்டில் பிறந்தார்.இந்தியாவிற்கு வந்து தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிசை அளிக்க உதவி செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவழித்தார்.இப்பெண்மணியின் பெயர் தான் அன்னை தெரசா.இவரது சேவைக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.அன்றாட வாழ்வில் இவர் செய்த உதவிகள் தானே மனிதகுலத்திற்கான சேவை என்று போற்றப்படுகிறது!
பிறருக்கு உதவுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.அதற்கு நல்ல மனம் வேண்டும்.பண்பட்ட நல்ல சிந்தனை வேண்டும்.நீங்கள் ஒருவருக்கு உதவி செய்வதினால் உங்களுக்கு மனநிறைவு மட்டுமே ஏற்படுகிறது.ஆனால் அவ்வுதவியைப் பெறும் நபரின் அத்தியாவசியமான தேவையை அது பூர்த்தி செய்து விடுகிறதே!அதுவே உங்களின் மன நிறைவை மேலும் கூட்டுகிறதே!!
உதவி கேட்டுக் கை ஏந்துவது இழிவானது தான்.அவருக்கு உதவி செய்ய மாட்டேன் என்று கூறுவது அதைவிட இழிவானதாகும்.அதேபோல் இந்தா பிடி என்று உதவுவது உயர்ந்ததாகும்.அவ்வாறு வரும் உதவி தனக்குத் தேவை இல்லை என்று மறுப்பது அதைவிட உயர்ந்ததாகும்.அவ்வாறு மறுக்கும் நிலை வர வேண்டும்.அதுவரை மனிதநேயத்தின் தேவை இருக்கிறது.
ஆதலினால் மற்றவர்க்கு உதவிகள் செய்வீர் உலகத்தீரே!
Posted by
Subramanian
at
0
comments
Labels: மனித நேயம்
==அதனினும் உயர்ந்தது==
ஈஎன இரத்தல் இழிந்தன்று;அதன் எதிர்
ஈயேன் என்றல் அதினினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று,அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப,நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக்,கலங்கிச்
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்;அதனாற்
புலவேன் வாழியர்,ஓரி;விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்!நின்னே.
---புறநானூறு
பாடியவர்:கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்:வல் வில் ஓரி
திணை:பாடாண்.துறை:பரிசில்
Posted by
Subramanian
at
0
comments
Labels: வேண்டுவோர்க்கு உதவுங்கள்