குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 107,145-ன் கீழ் வழக்கு

வருவாய்த் துறையில் நான் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு வழக்கு வந்தது.குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107 பிரிவின் கீழ் ஒரு வழக்கும்,பிரிவு 145 ன் கீழ் இன்னொரு வழக்குமாக ஒவ்வொரு வாய்தாவிற்கும் இரு தரப்பாரும் வருவார்கள்.
யாராவது ஒரு வழக்குரைஞர் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வாய்தா கேட்பார்.வழக்கு அடுத்த வாய்தா தேதி போட்டு ஒத்தி வைக்கப்பட்டு விடும்.வேலைப் பளு காரணமாக சில மாதங்களாக வழக்குக் கட்டை ஆராய முடியவில்லை.ஒரு வழியாக நெளிவு சுழிவுகளெல்லாம் பிடிபட்டதும் ஒவ்வொன்றாக ஆராய ஆரம்பித்தேன்.இந்தக் குறிப்பிட்ட வழக்கானது இரண்டு சகோதரர்களுக்கிடையே இருந்த சொத்துப் பிரச்சனை மட்டுமே.இருவரின் பெற்றோர் நீண்ட காலத்திற்கு முன்பே காலமாகிவிட்டனர்.வாரிசுகள் இந்த இரு மகன்களைத் தவிர வேறு யாருமில்லை.கொஞ்சம் நஞ்சம் சொத்தல்ல.நஞ்சை புஞ்சை தோப்பு துரவு ஆள் அம்பு ஏராளம்.எந்த சொத்தை யார் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்று வீட்டுக்குள் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் சிறிது சிறிதாக வளர்ந்தன.அப்புறம் சொந்தக்காரர்களும் ஊர்ப் பெரியவர்களும் எதற்கு இருக்கிறார்கள்?இரு தரப்பிலேயும் ஆளுக்கு ஆள் நெய் ஊற்றிப் பற்ற வைக்காதது தான் மிச்சம்.

ஒரு நாள் வாய்க்கால் தகராறு ஆரம்பித்தது.இருவருக்கும் பொதுவான ஒரு கிணற்றிலிருந்து இறைக்கும் நீர் ஒரு வயலுக்குப் பாய்ந்த பின்,அடுத்து உள்ள பொதுப் பாதையைத் தாண்டித் தான் மற்ற நிலங்களுக்குச் சென்று பாய முடியும்.பொதுக் கிணறு மூத்தவரின் வீட்டுக்கருகில் இருந்தது.ஆனால் நீர் பாயும் முதல் நிலம் இளையவருடையது.பொதுப் பாதையைத் தாண்டித் தான் மூத்தவரின் நிலமாக இருந்தது. யாருடைய வயலில் முதலில் பாய்ச்சுவது என்று ஆரம்பித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் காவல் துறையிடம் புகார் செய்யும் அளவிற்குச் சென்று விட்டது.கிணறு யாருடைய அனுபவத்தில் உள்ளது யார் யாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இயலாத நிலையில்,வழக்கை மேற்சொன்ன 107 பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர்.போட்டு சப் கலெக்டர் ஆபீசுக்கு அனுப்பி விட்டார்கள்.இம்மாதிரி வழக்குகளை விசாரிக்கவும் இன்னும் பல சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்காகவும் தான் சப் கலெக்டருக்கு நிர்வாக உட் கோட்ட நடுவர்(சப் டிவிஷனல் எக்சிகியூடிவ் மேஜிட்ரேட்)அந்தஸ்து தரப்பட்டுள்ளது.இது இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.வழக்கு ஆரம்பத்தில் கிணற்றுப் பாத்தியதை யாருடய பொறுப்பில் இருந்தது என்பதை முடிவு செய்யும் வரை இரு தரப்பினரும் கிணறு இருக்கும் பகுயில் நுழையக் கூடாது என்று தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

வழக்கு நிலுவையில் இருந்தபோதே பிரச்சனை மீண்டும் வெடித்து இரு தரப்பினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர்.காவல்துறை மீண்டும் தலையிட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து அதுவும் சப் கலெக்டர் முன்னிலையில் வந்தது.

நான் உதவியாளராக இவ்வலுவலகத்தில் சேர்வதற்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்வழக்கு தொடந்து விசாரணையில் இருந்து வந்தது.ஏன் கேட்கிறீர்கள்?ஒவ்வொரு வாய்தா நாளன்றும் இரு தரப்பிலேயும் சுமார் அறுபது எழுபது நபர்கள் வருவார்கள்.பிற்பகல் மூன்று மணிக்கு வாய்தா என்றால் காலை பதினோரு மணிக்கெல்லாம் ஆட்கள் வர ஆரம்பித்துவிடுவார்கள்.அங்கேயே கர் புர் என்று சலசலக்கும் சத்தம் கேட்கும்.மூன்று மணிக்கு கோர்ட் ஆரம்பிக்கும்.இந்த வழக்கில் இரு தரப்பிலேயும் சுமார் ஆறு வழக்குரைஞர்கள் ஆஜராவார்கள்.இரு தரப்பிலேயும் யாராவது ஓரிருவர் ஆஜராயிருக்க மாட்டார்.அப்படிப்பட்ட நபர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகி பிரதிவாதிகள் ஆஜராகாததற்கு ஏதாவது காரணம் குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்வார்கள்.சப் கலெக்டரும் அம் மனுக்களை ஏற்று வழக்கை ஓரிரு மாதம் கழித்து ஒத்தி வைத்துவிடுவார்.இரு தரப்பினரிடம் வாய்தா தேதி சொல்லிக் கையெழுத்து அல்லது ரேகை வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

வழக்கு இப்படியே போய்க் கொண்டிருந்தது.நாட்கள் செல்லச் செல்ல வழக்குக் கட்டுகளைஒவ்வொன்றாக ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தேன்.இவ் வழக்கில் காவல்துறையினர் கேஸ் போட்டதுடன் சரி.ஒரு முன்னேற்றமுங் காணோம்.விசாரணையே ஆரம்பிக்கவில்லை.எத்தனை ஆண்டுகளாக என்கிறீர்கள்?சுமார் ஏழு ஆண்டுகள் ஆகி விட்டிருந்தன.

ஒருநாள் அந்த கிராமத்திற்கான கணக்குப் பிள்ளை வேறொரு காரியமாக வந்திருந்தார்.அந்தக் காலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லை.கணக்குகளைப் பராமரிப்பதற்குக் கர்ணம் என்று அழைக்கப்படும் கணக்குப் பிள்ளையும் நிலவரி வசூல் செய்ய நாட்டாமை என்று அழைக்கப் படும் கிராம முன்சீப்பும் தான் இருந்தனர்.வந்திருந்த கணக்குப் பிள்ளை மிகவும் வயதானவர்.புத்திசாலி. என்னிடம் வந்து பணிவுடன் நின்றார்.என்னங்க என்ன வேணும்.என்று கேட்டேன்.உணர்ச்சிப் பெருக்கில் சொல்ல வந்ததை விட்டு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்.அலுவலகத்தில் உள்ளவர்களெல்லோரும் ஓடி வந்து ஆசுவாசப்படுத்திவிட்டனர்.சிறிது நேரம் கழித்து ஆரம்பித்தார்.

"ஐயா.சொல்றேன்னு யாரும் தப்பா நினச்சுராதீங்க.கிராமமே ரெண்டு பட்டுக் கெடக்கு.ஊர்லெ இவங்க குடும்பந்தான் ரொம்ப மதிப்பும் மருவாதையுமா இருந்துச்சு.இவங்க குடும்பந்தான் ஊர் நாட்டாமை,மணியகாரர் எல்லாம்.எந்த ஒரு நல்லது கெட்டதுக்கெல்லாம் இவங்க அப்பன்,தாத்தா கிட்டே தான் வருவாக.பெரியவர் காலமானதிற்குப் பெறவு ஒண்ணுமே நடக்கிறதில்லெ.
ஒரு கல்யாணங் காச்சி இல்லெ.ஒரு திருவிழா இல்லெ.சரியான வெவசாயமும் இல்லெ.எப்படி வாழ்ந்த குடும்பம் யார் சாபத்திலேயோ இப்படி ரெண்டுபட்டுக் கெடக்கு.இந்தக் கேசுனாலெ இரு தரப்பு சார்பிலேயும் ரொம்ப சனம் நடையா நடந்துகிட்ருக்காங்க.பொழப்பே கெட்டுப் போச்சுங்க. நீங்க யாரோ யார் பெத்த பிள்ளையோ.கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கேசை சீக்கிரம் விசாரிச்சு முடிச்சீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போவுங்க.
சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டார்.

இதில் ஒரு சாதாரண உதவியாளர் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?செய்ய முடிந்ததே!!

அடுத்த வாய்தா தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் இரண்டு சகோதரர்களையும் வரவழைக்கச் செய்தேன்.கிராமக் கர்ணம் வந்து முறையிட்டதைச் சொன்னேன்.
"இதப் பாருங்க.உங்க ரெண்டு பேர்கிட்டேயும் பெரிசா சொல்றதுக்கில்லே.நல்லா இருந்த ஊர் உங்க சொத்துப் பிரச்சனையாலெ ரெண்டு பட்டுக் கிடக்கு.நீங்க ரெண்டு பேரும் பழசையெல்லாம் கொஞ்ச நேரம் மறந்து நான் சொல்றதெக் கேட்டீங்கன்னா வழக்கெ ரொம்ப சுளுவா முடிச்சுடலாம்.என்ன சொல்றீங்க?"
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மேலும் ஆரம்பித்தேன்."நான் சொல்ற மாதிரி முடிவெடுக்கிறதுக்கு உங்க ரெண்டு தரப்பிலேயிருந்தும் வக்கீலே தேவையில்லெ.நீங்களே முடிவு எடுக்கலாம்."
ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"பிரச்சனையே சொத்துப் பிரிக்கிறது தான்.வேறெ ஒண்ணுமில்லெ.நபர்களும் நீங்க ரெண்டு பேர்கள் தான்.வேறெ யாருமில்லெ.இருக்கிற சொத்தை ரெண்டாப் பங்கிடுங்க.யார் பங்கு போட்றதுங்கிறீங்களா?உங்கள்லெ மூத்தவரே போடட்டுமே.சரியா ரெண்டாப் போடட்டும்.அதுலெ எந்தப் பங்கெ தான் எடுத்துக்கிறதுங்கிற உரிமை தம்பி முடிவு செய்யட்டும்.மிச்சப் பாதியெ அண்ணங்காரர் தானா எடுத்துக்கிறாரு.ரெண்டாப் பிரிக்கிற உரிமெ அண்ணனுக்கு.அதுலே எந்தப் பங்கு தனக்குன்னு மொத்ல்லெ முடிவு சொல்ற உரிமெ தம்பிக்கு"
ஒரு நிமிடம் பிரமை பிடித்தவர்கள் போல இருந்தார்கள்.இருவருக்கும் உடம்பு சிலிர்த்துக் கொண்டது.இருவர் கண்களீலிருந்தும் கண்ணீர் தாரை தாரையாய் வழிய ஆரம்பித்தது.கொஞ்சநேரத்தில் இருவரும் விசும்பலுக்கிடையே கட்டித்தழுவிக் கொண்டார்கள்.
முதலில் அண்ணன்காரர் ஆரம்பித்தார். "சார்.நீங்க கூப்பிட்டனுப்பிச்சதும் என்னடா ஒரு கிளார்க்
கூப்பிட்டுத் தனியாப் போறோமே,எதுக்கும் வக்கீலெக் கூப்பிட்டுப் பொகலாமேன்னு நெனச்சேன்.வக்கீலெல்லாம் கண்டிப்பா வேணான்னு நீங்க கூறிட்டீங்களாம்.சரி எவனெவனையோ பாத்தாச்சு.இந்த் கிளார்க்கெ சமாளிக்கமாட்டோமான்னு எகத்தாளம் பேசிட்டு வந்தேன்.என்னெ மன்னிச்சிடுங்க."
அடுத்து தம்பி முறை."சார்.உண்மெயெச் சொல்றேங்க.நாளாக நாளாக எனக்குள்ளேயே ஆத்திரம் பொங்கி வழிஞ்சிகிட்ருந்துச்சு.சீக்கிரமே இந்தக் கேஸ் முடியல்லேன்னா ஒண்ணூலெ ரெண்டு பாத்துற்றதுன்னு அண்ணார்(கவனியுங்கள்!அண்ணார்!!)மேலேயே கருவிகிட்டிருந்தேன்.இவ்வளவு சுளுவா முடிஞ்சுபோகும்னு நெனக்கவே இல்லே.எனக்கு மேலெ என்ன சொல்றதுன்னு தெரியல்லெ.சார்.நாங்க வாரோம்."
"கொஞ்சம் நில்லுங்க.அப்புறம் இந்தக் கேஸ் என்னாறது?ரெண்டு பேரும் நான் சொன்னமாதிரி சொத்தெப் பிரிச்ச பின்னாடி ஒரு பிரமாண வாக்குமூலம் தயாரிச்சு இம்மாதிரியாக சொத்தெப் பிரிச்சுக்கிட்டோம்னு சப் கலெக்டர் கிட்டெ வர்ற வாய்தான்னக்கித் தாக்கல் பண்ணனும்.அதுலெ சப் கலெக்டர் ஆர்டர் போடணூம்.அப்புறந் தான் கேசே முடியும்."என்றேன்."அப்படியே ஆகட்டுங்க."
அடுத்த வாய்தா அன்று இரண்டு சகோதரர்களும் சும்மா சொல்லக் கூடாது.பளிச்சென்று வேட்டி சட்டை நெற்றியில் பழனி விபூதி,சந்தனம் பூசி ஆஜரானார்கள்.கூட வந்தவர்களில் யார் எந்தத் தரப்பினர் என்று பிரிக்க முடியவில்லை.ஒருவருக்கொருவர் தழுவிக்கொள்வதும் மாமன் மச்சான் என்று கேலி செய்து கொள்வதும்,என்னமோ போங்கள் ஆபீஸே ஒரு மாதிரி ஆகி விட்டது.

சப் கலெக்டர் முன்னிலையில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ததும்,கேஸ் தள்ளுபடியானதும்,மறுநாள் ஒரு பத்துப் பதினைந்து வழக்குரைஞர்கள் என்னைச் சந்தித்து"எங்க பிழைப்பையே கெடுத்து விட்டீர்களே,இந்த ஒரு கேஸை நம்பியே இத்தனை வருஷம் பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தோமே எல்லாமே போச்சே"என்று புலம்பியதும் தனிக் கதை.

12 comments:

> said...

நல்ல உள்ளம் படைத்த அந்தப் பெரியவரும், உங்கள் நடுநிலையான தீர்ப்பும் மறக்க முடியாதது. விற்ற நிலத்தில் இருந்த புதையல் நிலத்தை வாங்கினவருக்குத்தான் சொந்தம் என்று விற்றவரும், "இல்லை, நான் நிலத்தைத்தான் வாங்கினேன். அதில் இருந்த புதையலை யல்ல" என்று வாங்கியவரும் தொடுத்த வழக்கைத் தீர்த்து வைத்த கரிகாலனின் தீர்ப்பைவிட உங்கள் தீர்ப்பு சிறப்பானது. அந்த ஊர் மக்களோடு நானும் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.

said...

சார் நீங்க டோண்டு சார்தானே? மறைக்காமல் உண்மையை சொல்லுங்க?

> said...

இல்லை.டோண்டு சார் வலைப்பதிவின் மூத்த பிதாமகர்களில் ஒருவர்.நானோ அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்.வலைப்பதிவிற்கு முற்றிலும் புதியவன்.

> said...

அம்புலிமாமா கதையில் வருவது போல இருந்தது. என் அண்ணாநொடு நான் சொத்து பிரிப்பது குறித்து ஆராய்ச்சி செய்தபடி இருந்தேன், இது கண்ணை திறக்கும். தங்கச்சிகளுக்கு உரிமை உள்ளத்தால் என்ன செயவுது? சொத்து எல்லாம் என் அமெரிக்கா உதியத்தில் வந்தது, அப்பா பெயருக்கு எழுதினேன். பயித்தியம். அறிவுரை செய்யவும்.

> said...

nandri

> said...

வருகைக்கு நன்றி செல்வராஜ்.உங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்களை நீங்கள் யார் பெயரிலும் எழுதி வைக்கலாம். யார் பெயரிலும் வாங்கித் தரலாம்.அது உங்கள் உரிமை.யாரும் எதிர்வழக்காட முடியாது.

> said...

sometimes complex problems have simple solutions :-) , but the lawyers :-(

said...

Hi

If the property is in Dads name, even though earn't by the son, and the Dad passed away, the following situations are to be considered.

(1) default nominee is mother - legal heir of Dad. Law is very clear on this, and will not distinguish, the earnings from whom.
(2) settlement can be reached by the family - direct descendants - sons and daughters - with equal rights. Mother should get sufficient money and care, for her life, even after the settlement.
(3) If the Dad had lived with a son, a little partiality can be given for taking care in the circumstances.
(4) If the daughters are married off, with good gifts, it can be accounted, and settlement can be done.
(5) Consideration has to be given whether the kids, have worked to keep up to property and partiality can be given.

Regards
Ramesh
( I had given money for my Dad and bought properties in his names, and after he passed away, my sister and myself had an amicable settlement, where she got one of our ancestral houses, and she ends up taking care of mother for life in the USA. Mediated by a well known Civil court judge, our relative in Tirupur along with two Special Cadre Tashildar Uncles. )

> said...

வாருங்கள் யாத்திரீகன்.நன்றி.தாங்கள் நினைப்பதுபோல்,பல சிவில் வழக்குகள் வழக்குரைஞர்களின் திருவிளையாடல்களால் ஆண்டுக்கணக்கில்கூட அல்ல தலைமுறைகளைத் தாண்டி இன்னும் நிலுவையில்தான் உள்ளன.

வாருங்கள் அனானி.
கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.எப்போதுமே நீதிமன்றங்களுக்கு வெளியேயும் நல்ல முடிவுகள் எடுக்கலாம்.

"மனமிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்"என்ற கண்ணதாசனின் வைரவரிகளை நினைத்துப் பாருங்கள்.

> said...

வாருங்கள் குலவுசனப்பிரியன் அவர்களே.ஓராண்டிற்கு முன் வருகை தந்த உங்களுக்கு உடனே நன்றி தெரிவித்துப் பின்னூட்டம் இட்டேன்.என்ன காரணத்தாலோ அழிந்துவிட்டது.இப்போது
மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

> said...

உண்மையிலேயே நீங்கள் 100% நேயமுள்ள மனிதன்

> said...

வாங்க மணிமொழியன்.நன்றி