குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 109-ன் கீழ் வழக்குகள்

"முக்காடு கேஸ் அல்லது சந்தேகக் கேஸ்"என்பது பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?பொதுமக்களின் அன்றாட
நலனுக்காகவும்,மக்களின் இயல்பான வாழ்க்கைக்காகவும்
காவல் துறையினரால் அடிக்கடி போடப்படும்
சந்தேகக் கேசுகள் இவை.அதாவது மக்கள் அன்றாடம்
புழங்கும் பேருந்து நிலையம்,மார்க்கெட்,சந்தை பொது இடங்களில்
இரவு நேரங்களில் காவல் துறையினர் விழிப்புடன்
வலம் வருவார்கள்.சந்தேகப்படும்படியான நபர்களைப் பிடித்து
அவர் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்,என்ன காரணமாக
இரவு நேரத்தில் பொது இடத்தில் தங்கி இருக்கிறார்
என்பது போன்ற தகவல்களை விசாரிப்பார்கள்.பிரச்சனையே
இல்லாதநபர்கள் காவல் துறையினரின் கேள்விக் கணைகளைச்
சுலபமாகவும்,திருப்திகரமாகவும் பதில் சொல்லிவிடுவார்கள்.
ஆனால்,குற்றம் புரியவேண்டும் என்ற நோக்கத்துடன்
முனைந்திருக்கும் ஒருவன் அகப்பட்டால்,அவனால்
சரியான பதில் சொல்ல முடியாது.
உதாரணமாக நள்ளிரவு ஒரு மணி அளவில் கடை வீதியில்
ஒரு கடையின் வாசற்படியில் ஒருவன் தூங்குவது மாதிரி
கடையின் பூட்டுகளைப் பார்த்தபடியே படுத்திருந்தான்
என்று வைத்துக் கொள்வோம்.காவல் துறையினரின்
எந்தக் கேள்விக்கும் அவனால் திருப்தியான பதில்
சொல்ல முடியவில்லை.அவனை அப்படியே விட்டு விட்டுப்
போய் விட்டால் நிச்சயம் குற்றத்தில் ஈடுபடுவான்.
அத்தகைய குற்றம் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் அல்லவா?
அப்படிப் பட்டவனை அகால நேரத்தில்
பொதுஇடங்களில் எக்கேடோ கெட்டுப் போ
என்றா விட்டுவிட்டுப் போக முடியும்?
அப்புறம் காவல் துறை எதற்கு இருக்கிறது?

அத்தகைய நபர்களைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து
என்ன காரணத்திற்காக அங்கே இருந்தான் என்பதைத்
தெளிவாகக் குறிப்பிட்டு அந்நபரைக் கைது செய்து
காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று உரிய
நிர்வாக நடைமுறைகளின்படி குற்றவியல்
நடைமுறைச் சட்டம் பிரிவு109 ன் கீழ் முதல்
தகவல் அறிக்கை தயாரித்து லாக்கப் அறையில்
அடைத்து விடுவார்கள்.மறுநாள் காலை அந்தக்
கைதியை சப் கலெக்டர் முன்பாக ஆஜர்படுத்துவார்கள்.
சப் கலெக்டர் அந்தக் கைதியை விசாரணை செய்து தகுந்த
வகையில் கண்டிப்பார்.பிறகு குறிப்பிட்ட தொகைக்குக்
கைதியின் சொந்த ஜாமீன் பேரில் ஒரு ஆண்டு காலத்திற்கு
நன்னடத்தையுடன் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து
அன்றைக்கே அவனை விடுவித்து விடுவார்.
இச்சட்டத்தைக் காவல்துறையினர் செம்மையாக அமுல்படுத்துவதால்
சாதாரணப் பொதுமக்களாகிய நாம் உட்பட அனைவரும்
கவலைப் படாமல் இரவில் தூங்குகிறோம்.

இச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்யும் அதிகாரம் 1983 க்கு முன்னால்
வரை வட்டாட்சியர் என்று அழைக்கப்படும் தாசில்தாரிடம்
இருந்து வந்தது.1983 ல் இச்சட்டம் திருத்தப்பட்டபின்
இந்த அதிகாரம் தாசில்தாரிடமிருந்து சப் கலெக்டருக்கு மாற்றப்பட்டது.
எனவே தாசில்தார்களிடம் நிலுவையில் இருந்த கேஸ் கட்டுகள்
சப் கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது.

5 comments:

> said...

இடுகைகளைப் பற்றி பிறகு படித்துவிட்டுக் கருத்துச்சொல்கிறேன். தங்கள் தளத்திற்கு வந்தவுடன் வலப்புறம் மேய்ந்தேன். அதில் என்னைக் கவர்ந்த செய்திகளைச் சொல்கிறேன். நேசமுள்ள மனிதன் என்றெழுதாமல் நேயமுள்ள மனிதன் என்றெழுதியமையால் தங்களின் தமிழ்ப்பற்று என்னை மிகவும் கவருகிறது. இரண்டாவது இவர்களால் தமிழ்வளர்கிறது என்று சிங்கை வானொலியைச் சுட்டியமை. மூன்றாவதாக மார்பகப் புற்றுநோயால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களுக்கு மனிதநேயத்துடன் உதவுங்கள் எனக்கேட்கும் பண்பு! - வாழ்த்துக்கள் திரு திண்டுக்கல் சர்தார் அவர்களே!

> said...

யாவரும் பயனடைய யாவரும் வந்து படித்துப் பயன்படவேண்டிய வலை. அதற்காகவே உங்களை ஆயிரம் முறை வாழ்த்தலாம். வாழ்த்துக்கள். தாங்கள் ஓர் வழக்குரைஞராகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

முகப்பில் தாங்கள் ஓர் தனித்தமிழ்வாதியைப் போல்காட்டிக் கொண்டிருப்பதாக எனக்குத் தெரிகிறது. (ஒரு வேளை அது என் பிழையோ?) ஆனால் இடுகைகளில் நிறைய வடசொற்களைக் கையாண்டுள்ளீர்கள். இது என்ன முரண்? சட்டத்துரையில் பல சொற்கள் வடசொற்களாகவே இருக்கின்றன. அந்த பல சொற்களுக்கெல்லாம் தமிழ்சொற்களை உருவாக்கவேண்டும் என்ற நினைப்பு அரசுக்கும் தமிழ்விரும்பிகளுக்கும் கூட இல்லை. தாங்கள் தங்கள் இடுகைகளில் முடிந்தவரை நல்ல தமிழில் எழுதலாமே?

எ.காட்டிற்கு:- சந்தேகம் -ஐயம், பிரச்சினை -குழப்பம், சுலபம் -இலகு

> said...

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அகரம் அமுதா அவர்களே.
நான் தனித் தமிழ்வாதி அல்லன். வழக்குரைஞனும் அல்லன்.

//ஆனால் இடுகைகளில் நிறைய வடசொற்களைக் கையாண்டுள்ளீர்கள்//

....//தாங்கள் தங்கள் இடுகைகளில் முடிந்தவரை நல்ல தமிழில் எழுதலாமே...//

வடமொழிச் சொற்களை வேண்டுமென்றே கையாளவில்லை.தனித் தமிழில் எழுதி என் எழுத்துக்களை ஒரு கட்டுக்குள் வைக்கவும் விரும்பவில்லை.மக்கள் அன்றாடம் புழங்கும் சொற்களை அப்படியே எழுதினேன்.

> said...

சீர்விளங்கும் செந்தமிழில் தேர்ந்தெடுத்த கட்டுரைத்துப்
பேர்விளங்கப் பெய்தென் வலைகளில் -வார்க்கின்றேன்
என்றாலும் என்வலையில் இன்றமிழைச் செய்திடவே
நன்றாகச் சொன்னீர் நகைத்து!

தோழரே! என்வலை 99விழுக்காடு தனித்தமிழால் ஆனது. தங்களின் வழிகாட்டலுக்கென் வாழ்த்துக்கள்

> said...

நகைச்சுவை என்பது நாவொடு நிற்கின்

பகைச்சுவை ஏது பகர்.



அன்பின் அகரம் அமுதா அவர்களே

பண்பான வெண்பாவுக்கு நன்றி.