தாலுகா அலுவலகத்தில் பணி புரிந்தபோது ஒரு சுவாரசியமான கோப்பினைக் கையாள நேரிட்டது.
சமூகத்தில் உள்ள ஒரு நபர்,மதிப்பும்செல்வாக்கும் பெற்ற நபர்.அவருக்கு மலைக் கிராமத்தில் நிலங்கள் இருப்பதாகவும் அதில் ஆரஞ்சு,எலுமிச்சை,வாழை சாகுபடி செய்திருப்பதாகவும்,இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் வந்து தனது நிலத்தில் உள்ள பயிர்களை நாசப்படுத்துவதாகவும் அந்நிலத்தில் உள்ள தனது வீட்டில் தான் தங்கியிருக்கும்போது காட்டு விலங்குகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் தனக்கு ஒரு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்குமாறும் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனுச் செய்திருந்தார்.அம்மனு மீது விசாரணை செய்து அறிக்கை அனுப்புமாறு கேட்டு தாசில்தாருக்கு அனுப்பப்பட்டது.
மனுதாரர்,கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர் ஆகிய அனைவரையும் தாலுகா அலுவலகத்தில் அழைத்து விசாரணையும் நடந்து முடிந்து விட்டது.அவைகளைப் பரிசீலித்து அறிக்கை அனுப்ப வேண்டியது தான் பாக்கி.தாசில்தாரும் துப்பாக்கி உரிமம் வழங்கப் பரிந்துரை செய்து குறிப்பும் எழுதிவைத்து விட்டார்.
இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட உதவியாளர் மாறுதலாகி உடனே விடுவிக்கப்பட்டார்.நான் உதவியாளராகப் போய்ச் சேர்ந்தேன்.
ஒரு வாரம் சென்றிருக்கும்.ஒரு நாள் கோப்புகளைப் பார்த்துக் கொண்டே வரும்போது தாசில்தார் கூப்பிட்டனுப்பினார்.மேற்சொன்ன கோப்பில் தான் ஏற்கனவே துப்பாக்கி உரிமம் வழங்கப் பரிந்துரை செய்து குறிப்பு எழுதியிருப்பதாகவும் அதன்படி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதித் தன் ஒப்புதலுக்கு அனுப்புமாறும் சொன்னார். சரியென்று சொல்லிவிட்டு சீட்டுக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட கோப்பினை எடுத்துப் பரிசீலித்தேன்.
மனுதாரர் சம்பந்தப்பட்ட மலைக் கிராமத்தில் தனக்குப் பத்து ஏக்கர் முப்பது சென்ட் நிலம் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.அதற்குரிய சிட்டா,அடங்கல் நகல்களைப் பரிசீலித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிந்தது.மனுதாருக்குச் சொந்தமாக அந்தக் குறிப்பிட்ட மலைக் கிராமத்தில் உள்ள நிலம் வெறும் முப்பது சென்ட் நிலம் மட்டுமே.மீதி எல்லாம் அதைச் சுற்றியுள்ள அரசுப் புறம்போக்கு நிலங்கள்.அதற்காக அவருக்கு வருடாவருடம் தண்டம் தீர்வை விதிக்கப்பட்டு வந்திருக்கிறது.அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து பயிரிட்டிருப்பது மட்டுமல்லாமல் அதற்குப் போய் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்ற காரணத்தைக் காட்டித் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்குமாறு கேட்டு மனுவும் செய்திருக்கிறார்.சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அரசு நிலங்கள் எனப் பிரித்துக் காண்பிக்காமல்".....தான் விவசாயம் செய்துவரும் நிலங்கள்..........."என்று பொதுவாக வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்,
இவைகளை எடுத்துக் காட்டி, மனுதார் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு நிலங்களை உடனையாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு துணைத் தாசில்தார்,வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுக்கு உத்தரவும்,இவருக்குத் துப்பாக்கி உரிமம் வழங்கத் தேவை இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதமும் எழுதி வைத்தேன்.தாசில்தாரிடம் விளக்கிச் சொன்னபிறகு கடிதத்தை ஒப்புதல் செய்தார்.
பிறகு அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு "நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்.தவறானஒருவருக்குத் துப்பாக்கி உரிமம் வழங்கப்பட இருந்தது தடுக்கப்பட்டது.தப்பித் தவறி பரிந்துரை செய்தபின் மாவட்ட ஆட்சியர் இத்தவறைக் கண்டுபிடித்திருந்தால் என் வேலை போயிருக்கும்" என்றார்.
5 comments:
சுதந்திர தின வாழ்த்துக்கள். 61.
கோமணத்தான் தரையில் உறங்க
கொடி கம்பம் அருகில்
அவனுக்கு
கொடி ஏற்றம் கனவு
அவன் கோவணம்
பறிக்கப்பட்டது.
சுதந்திரம்
- வைரமுத்து
நன்றி செல்வராஜ்.
திண்டுக்கல் சர்தார் அவர்களுக்கு
உண்மைத்தமிழனின் வலைப்பூவில் நீங்கள் கோலம் அமைப்புகு 60ஆயிரம் ரூபாய்க்கான சிங்கப்பூர் வெள்ளிகள் அனுப்பியுள்ளதாகத்தெரிவித்திருப்பதைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி. எனினும் இதுவரை கோலம் அலுவலகத்துக்கொ, எமது வங்கிக் கணக்கிற்கோ அது வந்து சேரவில்லை என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அன்புடன் ஞாநி 30.8.2009
நல்ல பணி. பாராட்டுகள்
அந்த ஆள் உங்களுக்கு கையூட்டு தரவும் முயன்றிருப்ப்பாரே. முயன்றால் கம்பி எண்ண வையுங்க:
சொத்தை விட நல்லதொரு சமுதாயத்தை நம் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment